×

திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு அரசு பள்ளிக்கு கலையரங்கம்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ உறுதி

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டிதரப்படும் என சந்திரன் எம்எல்ஏ உறுதியளித்தார். திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்து கொண்டு 44 மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது எம்எல்ஏ பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அதன் காரணமாக அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்து தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கற்பித்தலில் புதிய திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் வெகுவாக உயர்ந்துள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வியை கற்று சிறந்த நிலைக்கு வாழ்வில் முன்னேற வேண்டும்.

கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்று பூனிமாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் கலையரங்கம் கட்டப்படும் என உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில், திருவலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூலூர் ராஜேந்திரன், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், திமுக நிர்வாகிகள் நல்லாட்டூர் கமலநாதன், குப்பன், அர்ஜுன் ரெட்டி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாபு, வெங்கடாசலம் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பூனிமாங்காடு கிளை செயலாளர் குப்பனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு எம்எல்ஏ ரூ.10,000 நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

The post திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு அரசு பள்ளிக்கு கலையரங்கம்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ உறுதி appeared first on Dinakaran.

Tags : Tiruvalangadu Union Poonimangadu Government School ,S. Chandran ,MLA ,Tiruthani ,Chandran ,Tiruvalangadu Union Poonimangadu ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...